Tuesday 19 January 2016

“கருணாநிதி..கருணாநிதி.. .கருணாநிதி!” – கோர்ட்டில் ஆஜரானார் தி மு க தலைவர்!

முதல் – அமைச்சர் ஜெயலலிதா 4 ஆண்டுகளில் சாதித்தது என்ன என்கிற தலைப்பில் வாரப்பத்திரிகை ஒன்றில் கடந்த நவம்பர் மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.இதனை முரசொலி நாளிதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்டுரையாக எழுதி இருந்தார்.இதையடுத்து கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது முதல் – அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஜனவரி 18–ந்தேதி இருவரும் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு முன்பு கருணாநிதி மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட போதெல்லாம் வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்த இந்த அவதூறு வழக்கில் தடை உத்தரவு எதுவும் பெறப்போவதில்லை என்றும், விசாரணைக்காக நானே கோர்ட்டில் நேரில் ஆஜராவேன் என்றும் கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை ஹைகோர்ட் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

பின்னர் மீடியாக்களைச் சந்தித்த கருணாநிதி, “தமிழர்கள் அனைவரும் கட்சிச் சார்பில்லாமல், ஒன்று பட்டு தமிழ்நாட்டு நன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம்.அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகியிருப்பதன் மூலம் நீதி என்றைக்கும் வெல்லும். அந்த நீதியைப் பின்பற்றி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.அவதூறு வழக்கு களை தொடர்ந்து தொடுப்பது சரியானதல்ல என சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.இத்தகைய சூழலில் அவதூறு வழக்குகளை எல்லா கட்சிகள் மீதும் தொடுத்துக் கொண்டு வரும் அ.தி.மு.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று கூட வேண்டுமென்று நான் வற்புறுத்த விரும்பவில்லை. இது அவர்களாகப் பார்த்து எடுக்க வேண்டிய முடிவு. அந்த முடிவுக்கு நானும் கட்டுப்படுவேன். பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை இந்த அரசு திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை என் உள்ளத்திலே இருக்கிறது என்பதை நாடு நன்றாக அறியும்.”என்று தெரிவித்தார்

0 comments:

Post a Comment