Thursday 28 January 2016

எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?

"மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்று சொல்லும் அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிதான் மூன்று மாணவிகளின் உயிரை காவு வாங்கிய எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தாரா அல்லது இணை அமைச்சர் பனபகாலட்சுமி அனுமதி கொடுத்தாரா என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பங்காரம் என்ற இடத்தில் இயங்கி வருகிறது எஸ்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி. இக்கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த மோனிஷா, திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா ஆகியோர் கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

"அரசு அங்கீகாரம் இல்லாத இந்த கல்லூரி,  பொய் பிரசாரம் செய்து, மாணவ-மாணவிகளை சேர்த்து, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியில்லாத இந்த கல்லூரியில் பயின்ற மாணவ-மாணவிகளை கொத்தடிமைகளாக நடத்தி வந்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இதனை கண்டித்து பல முறை மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் செய்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து, தீக்குளித்து இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அப்போதே மாவட்ட நிர்வாகமும், அரசும், இந்த கல்லூரி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதான் இவர்களின் தற்கொலைக்கு காரணமாகியுள்ளது.

மூன்று மாணவிகளின் உயிர்களை காவு வாங்கிய இந்த கல்லூரிக்கு, அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியும்,  இணை அமைச்சராக இருந்தஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமியும், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இதனை மறுத்துள்ள அன்புமணி, "மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது, இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமி இருந்தார். அவருக்கு கீழ்தான், ஆயூஸ் எனப்படும் ஹோமியோபதி மருத்துவமனைக்கான அனுமதி வழங்கும் பிரிவு இருந்தது" என தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 24ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை:

"விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்திலுள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் நேற்று மாலை அருகிலுள்ள கிணற்றில் ஒன்றாக குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இது பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கிறது. அந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் மூன்று மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன? என்பதை ஆராய வேண்டும். எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கட்டணக் கொள்ளை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதியின்மையை எதிர்த்து அங்கு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சில மாணவர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த அறிக்கையை மேல்நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. ஆனால், அதன்மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் தமிழக சுகாதாரத்துறை எடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி, சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகி வாசுகியும், அவரது மகன் சுதாகரும் அடிமைகளைப் போல நடத்தியுள்ளனர். கல்லூரி வளாகத்திலுள்ள முள் மரங்களை வெட்டுவது, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்த்து கேள்விக் கேட்பவர்கள் கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த அடியாட்களால் மிரட்டப்பட்டிருக்கின்றனர். பாலியல் சீண்டல்களும் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத மாணவிகள்,‘‘கட்டிய பணம் கூட தேவையில்லை... சான்றிதழ்களை கொடுங்கள். நாங்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்கிறோம்’’ என்று கெஞ்சிய போதும் அதை கல்லூரி நிர்வாகம் பொருட்படுத்தாததால் மாணவிகள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்புகார்கள் எதையும் புறக்கணிக்க முடியாது.

எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசும் மருத்துவப்பல்கலைக்கழகமும் உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அரசியல் கட்சி பிரமுகர் மூலம் அதே சமுதாயத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெண் உயரதிகாரிக்கு பெரும் தொகை தரப்பட்டு சித்த மருத்துவக் கல்லூரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

சித்த மருத்துவக் கல்லூரி மீது ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், அதன்மீதும், அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அனுப்பிய விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசு தான் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.
மாணவிகளின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அதற்கு காரணமான அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரியை மூடி முத்திரையிட்டு அதில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

0 comments:

Post a Comment