Thursday 28 January 2016

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு !!!

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.

எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன் முதன்மைப் பணி.

கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.

ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி என்னதான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது

இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

0 comments:

Post a Comment