Thursday 28 January 2016

சிம்பு வயசுதான் இவருக்கும்… ஆனால் இவர் எப்படி பாருங்க!

நம்ம ஊரு இளைஞர்கள் பீப் ஸாங் இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே வயதுதான்… அம்மாவை போற்றி ஒரு பாடலை உருவாக்கி அதை காணொளி வடிவத்திலும் வெளியிட்டிருக்கிறார் ஒரு நடிகர். நான் தமிழன்டா… என்று மூச்சுக்கு முன்னூறு தடவை மாரில் அடித்துக் கொள்கிற நபர்கள், ஒரு கேரள வாலிபரின் இந்த முயற்சிக்கு தலை தாழ்ந்து வணக்கம் சொல்லியே ஆக வேண்டும்.

விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரஞ்சித்மேனன். இவரது இயக்கத்தில்தான் நாம் மேலே குறிப்பிட்ட ‘அன்பென்றாலே அம்மா’ என்ற இசை வீடியோ ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த வீடியோ ஆல்பத்தில் பழம்பெரும் இந்தி நடிகை ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார். ஜரீனா வஹாப் எம்.ஜி.ஆருடன் நவரத்தினம் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர். கமலுடன் விஸ்வரூபம், சூர்யாவுடன் ரத்த சரித்திரம் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இப்படியொரு ஆல்பம் பண்ணணும்னு முடிவெடுத்ததும் நான் போய் பார்த்தது ஜரீனாம்மாவைதான். அவங்களுக்கு இந்த பாடலை போட்டுக் காட்டினோம். உடனே சரின்னு சொல்லிட்டாங்க. மூணு நாள்ல எடுக்கப்பட்ட பாடல் இது. முதலில் அன்னையர் தினத்தில் வெளியிடலாம்னு நினைச்சோம். ஆனால் என்னோட அம்மாவின் பிறந்த ஜனவரி 26. குடியரசு தினம் வேற. அதே நாளில் வெளியிடலாம்னு முடிவு பண்ணி யூ ட்யூப்ல வெளியிட்டுட்டோம் என்றார் ரஞ்சித்மேனன்.

ஜிகினா என்ற படத்தின் ஹீரோ ஆன்சன், மாடல் அழகி ஸ்ருதி ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள். கார், பணம், பங்களா இதெல்லாம் முக்கியமில்லை. ஒரு மகன் தாய்க்காக செலவிடும் நிமிஷங்கள்தான் உயர்ந்தது என்கிற கருத்தைதான் இந்த ஏழு நிமிட இசை ஆல்பம் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஸ்வேதா மோகன் பாட, ரஞ்சித் உன்னி இசை அமைக்க, சாரதி பாடலை எழுதி உள்ளார். இந்த நல்ல முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment