Thursday 21 January 2016

'அப்புறம்... என்னா '****'க்கு கணக்கெடுத்தீங்க?' - தாசில்தாரிடம் எகிறிய முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் 'தூள்' சினிமாப் படம் 'சொர்ணக்கா' ஸ்டைலில், அரசு அதிகாரியை திட்டித்தீர்த்த விவகாரம் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவ, கதிகலங்கிக் கிடக்கிறது கடலூர் மாவட்ட அதிமுக.

சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் கடலூர் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வருவாய்த் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதிகளில் சரிவர கணக்கெடுப்பு பணி நடத்தாததால்,  பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், தொகுதி எம்.எல்.ஏவான  செல்வி ராமஜெயத்தை சந்தித்து 'வரும் தேர்தலில் இதற்கான பாடத்தை கற்பிப்போம்' என்று எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இதில் டென்ஷனான செல்வி ராமஜெயம், பலாப்பழத்துக்கு பெயர் பெற்ற ஊரின் தாசில்தாரை இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

சாவகாசமாக பேசத்தொடங்கிய ராமஜெயம், "என்ன சார் கணக்கெடுத்தீங்க... என்ன பணம் போட்டீங்க? எங்களையெல்லாம் ஒதை வாங்க வைக்கணும்னு முடிவு பன்னிட்டீங்களா...?" என்று பேச,  அதற்கு தாசில்தார், " நீங்க கலெக்டர்கிட்ட பேசுங்க மேடம். எங்கிட்ட பேசாதீங்க!" எனச்சொல்ல, " ஆ... ஊ...ன்னா ஆர்.டி.ஓ.கிட்ட பேசுங்கிறீங்க,  கலெக்டர்கிட்ட பேசுங்கிறீங்க. புவனகிரி வடக்கு திட்டு எல்லாம் பணம் போகலையாம். நீங்க என்னா... நல்லா என் வாயில வருது... கன்னா பின்னான்னு கேப்பேன்... அப்புறம் என்னா **** க்கு எல்லாத்தையும் கணக்கெடுக்க சொன்னீங்க...?" என்று கடுமையாக பேசிக்கொண்டே போக, எம்.எல்.ஏ வின் பேச்சால் அப்செட் ஆன தாசில்தார்,  தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே அவருக்கு அரை நாள் பிடித்ததாம்.

எம்.எல்.ஏ- தாசில்தாருக்கு இடையே நடந்த இந்த உரையாடல்தான், தற்போது வாட்ஸ் அப் மூலம் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஒருவரின் இந்த அவமரியாதையான பேச்சு,  கடலூர் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  தற்போது செல்வி ராமஜெயத்தை கண்டித்து  போராட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏ. செல்விராமஜெயம் பற்றி அவரது கட்சித் தலைமைக்கும் புகார் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் கடலுார் மாவட்ட தலைவர் மகேஷ், " செல்வி ராமஜெயம் இப்படி அதிகாரிகளை அவமரியாதையான வார்த்தைகளில் பேசுவது இது முதன்முறையல்ல. அவரின் இயல்பான சுபாவமே அதுதான். ஆனால் இந்த முறை விடப்போவதில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்த சங்கத்தில் பேசி வருகிறோம்.

அரசு ஊழியர்களான நாங்கள் எங்களது வழக்கமான பணிகளுக்கிடையில்தான் நிவாரணப்பணி கணக்கெடுப்பும் நடத்துகிறோம். இந்தப்பணியினிடையே எங்களது உயரதிகாரிகள் தரும் பணி, அவ்வப்போது மீட்டிங் என பரபரப்பாக இயங்கவேண்டியதிருக்கிறது. நிவாரண கணக்கெடுப்பு பணி இன்னமும் முடியாத நிலையில்,  ஒரு எம்.எல்.ஏ வான முன்னாள் அமைச்சர் இப்படி பேசுவது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகா எனத் தெரியவில்லை" என முடித்துக்கொண்டார்.

இதனிடையே வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்விப்பட்ட செல்வி ராமஜெயம்,  சம்பந்தப்பட்ட தாசில்தாரை பிடித்து 'பேச' முயன்றாராம். ஆனால் தாசில்தார் அதற்கு பிடிகொடுக்கவில்லை. இதனால் செல்வி ராமஜெயம் சார்பாக அந்த மாவட்ட டெல்லி பிரதிநிதி ஒருவர்,  சங்கத்தை தொடர்புகொண்டு சமாதானம் பேசியதாகவும், தேர்தல் நேரத்தில் இந்தப் பிரச்னையை பெரிதுபடுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால்  'பூனைக்கு மணி கட்டியே தீருவோம்' என்கிறது வருவாய்த்துறை வட்டாரம்!

0 comments:

Post a Comment