Thursday 21 January 2016

அதிகம் அறியப்படாத சுந்தர்.சி-யின் பக்கங்கள்-நிழலில் அசத்தல் காமெடி.. நிஜத்தில் அலட்டாத சீரியஸ்:

 தமிழ் திரையுலகில் நகைச்சுவைப் படங்களை வரிசைப்படுத்தினால் 'உள்ளத்தை அள்ளித்தா', 'வின்னர்', 'கிரி' ஆகிய படங்களைத் தவிர்க்க முடியாது. டிவி சேனல்களின் அப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்பாத நாட்கள் அரிது.

இந்தப் படங்களின் இயக்குநர் சுந்தர்.சி-க்கு இன்று பிறந்த நாள் (ஜன.21). இப்போதும் காமெடி படம் எடுக்கிறோம் என்றவுடன் பலரும் சொல்வது 'உள்ளத்தை அள்ளித்தா' மாதிரி ஒரு படம் பண்ணனும் என்பது தான்.

ஆனால் இயக்குநர் சுந்தர்.சியை நேரில் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு வசூல் வெற்றி கொடுத்த படங்களின் இயக்குநர் என்பதை அவருடைய பேச்சில் காணவே முடியாது. அந்தளவுக்கு இனிமையாகவும் இயல்பாகவும் பேசக்கூடியவர்.

சுந்தர்.சி உடன் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தைத் தொடர்ந்து தற்போது 'அரண்மனை 2' படத்திலும் நடித்திருக்கிறார் சித்தார்த். "சுந்தர்.சி எப்போது கூப்பிட்டாலும், படத்தின் கதையைக் கேட்காமல் நடிக்க தயாராக இருப்பேன்" என்று பேட்டியில் தெரிவித்திருக்கிறார். காரணம், அவர் பணியாற்றும் விதம். அந்தளவுக்கு தயாரிப்பாளருக்கு பணத்தை மிச்சப்படுத்தி தன் படம் மூலமாக லாபம் கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றுபவர் சுந்தர்.சி.

இயக்குநர் சுந்தர்.சியை 'தீயா வேலை செய்யணும் குமாரு' படப்பிடிப்பில் காண முடிந்தது.

ஹன்சிகாவும் திருமணத்துக்கு வருகிறார் என்று அலுவலகத்தில் அனைவரும் தங்களை பதிவு செய்யும் காட்சியை போரூர் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தில் படமாக்கினார்கள். சித்தார்த்திடம் "சித்தார்த்.. அந்தக் கூட்டம் இருக்காங்க இல்லையா. அங்கு போய் நானும் வர்றேன்" என்று கத்த வேண்டும் என்று சொன்னார் சுந்தர்.சி. உடனே அக்காட்சியை மானிட்டரில் பார்த்துக் கொண்டே இன்னும் குதிங்க, இன்னும் கத்துங்க என்றார். ஷாட் ஒ.கே அடுத்து என்றார். இன்னொரு முறை வேண்டாமா என்று சித்தார்த் கேட்க, "சித்தார்த்.. சில நொடிகள் வரப்போகிறது. இது போதும். பார்த்துக் கொள்ளலாம்" என்று போய்விட்டார் சுந்தர்.சி

நடிகர்களிடம் நண்பர்களாக பேசி வேலை வாங்குவதில் சுந்தர்.சி வல்லவர் என்று தெரிந்து கொண்டேன். அதிலும், எப்போதுமே ரொம்ப கூலாக பேசிக் கொண்டிருப்பார். இசை வெளியீட்டு விழா, பேட்டிகள் என எதிலுமே அதிகம் பேசாத சுந்தர்.சி தனது பழைய படங்கள் உருவான விதம் உள்ளிட்டவற்றை BOFTA-வில் படிக்கும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட வீடியோவை காணும்போது ஆச்சர்யமே மிஞ்சியது. அதில் அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்..

* முதலில் 'வின்னர்' படத்தில் இடைவேளை வரை தான் வடிவேலுவின் காட்சிகள் இருந்தது. சுந்தர்.சி - வடிவேலு இணைப்பில் முதல் படம். இருவரும் படத்துக்காக பேசும் போது வடிவேலு "கால் உடைந்திருக்கிறதே" என்று சொன்னவுடன் "அப்படியா.. ஒன்றும் பிரச்சினையில்லை படத்தில் முதல் காட்சியிலே உங்கள் காலை உடைப்பது போல காட்சியை வைத்துவிட்டு நீங்கள் நொண்டி நொண்டி வருவது போல காட்சிகளை வைத்து காமெடி வைத்து விடலாம்" என்று கூறியிருக்கிறார் சுந்தர்.சி. காலை உடைக்கும் காட்சிக்காக எழுதப்பட்ட வசனம், "இந்த பார்ட்ரைத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வர மாட்டேன்" என்பது. வடிவேலுவின் காமெடி காட்சிகள் நல்லபடியாக அமைந்துக் கொண்டே வந்ததால், இடைவேளைக்கு பிறகு அவரை நாயகனுடனே வருவது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்.

* 'தீயா வேலை செய்யணும் குமாரு' என்ற படம் ஒரு பழைய இந்தி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். அப்படத்தில் நாயகியை காதலிக்க வைக்க ஓர் இடத்தில் போய் ஐடியாக்கள் வாங்கி வருவார். அந்த படத்தை அப்படியே மாற்றி, ஐடியா கொடுப்பவரே காதலிக்கு அண்ணனாக இருந்தால் எப்படியிருக்கும் என திரைக்கதையை முழுக்க மாற்றி பண்ணியிருக்கிறார்.

* 'அருணாச்சலம்' படம் பண்ண சுந்தர்.சியை அழைத்து ரஜினி சொன்னது வேறு ஒரு கதை. ரஜினியை இயக்குகிறோம்.. வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று நினைத்து, அவருக்கு சொல்லப்பட்ட கதை பிடிக்கவில்லை என்றாலும் சூப்பர் சார் என்று தெரிவித்திருக்கிறார் சுந்தர்.சி. அதற்கு பிறகு ரஜினியோடு உட்கார்ந்து பேசி வெற்றியாக அமைந்த படம் 'அருணாச்சலம்'.

* எந்த ஒரு படத்தையும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை. 'அந்த போதை எனக்கு தேவையில்லை. சென்சார் ஆகிவிட்டால் அப்படத்தில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும்' என்பார். ஒவ்வொரு படம் வெளியாகும் போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அல்லது விவாதத்தில் தான் இருந்திருக்கிறார்.

* " ட்விட்டர், பேஸ்புக் விமர்சனத்தை எல்லாம் நான் பெரிசாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சொல்லும் கருத்துகள் எல்லாம் புத்தி உள்ளே சென்று எங்கே எனது இயக்குநர் பணியை பாதித்து விடுமோ என்பதால் அந்தப் பக்கமே வருவதில்லை. ஒரு படைப்பாளியாக அதில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. விமர்சனங்களை படிப்பேன், ஆனால் அதை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்."

* " காமெடி காட்சிகளை தனி ட்ராக்காக வைப்பதில் உடன்பாடே கிடையாது. படத்தின் கதையில் சில விஷயங்கள் போரடிக்கும், அதை நகர்த்துவதற்குத் தான் காமெடி தேவை. காமெடி என்பது கதையில் தேன் தடவுவது போல தான்."

அவர் BOFTA-வில் பல்வேறு விஷயங்கள் கூறியிருந்தாலும், அவர் சொன்னதில் நான் முழுமையாக ரசித்தது இன்றைய இயக்குநர்கள் பற்றித் தான். "ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் அவ்வளவு வெற்றியைப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். இப்போது நிறைய பேரைப் பார்த்தால் சிரிப்பாக வரும், ஒரு படம் பண்ணிட்டு சினிமா என்றால் என்ன என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்" என்று சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி.

தன் பெரும்பாலான படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு, வசூல் ரீதியில் வெற்றி என இருந்தும் சுந்தர்.சி அமைதியாக தன் வாழ்க்கையை கடப்பது தான் அவருடைய மிகப்பெரிய பலம்.

பிறந்த நாள் வாழ்த்துகள் சுந்தர்.சி! 

0 comments:

Post a Comment