Monday 18 January 2016

பாகுபலிக்கு எந்த விதத்திலும் குறையாத படம்... மலையாள இயக்குநரின் சவால்!

2015ல் பிரமாண்டம் என்ற வார்த்தையின் மறு உருவமாய் மாறிய பெயர் பாகுபலி.  கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னதாகவே எந்திரன், பாஜிராவ் மஸ்தானி, தூம் 3, தேவ்தாஸ், ஜோதா அக்பர், போன்ற படங்கள் பிரம்மாண்ட லிஸ்டில் உள்ளன. தற்போது இவ்வரிசையில் இணைய உள்ளது மலையாள திரையுலகமும். எதார்த்த சினிமாக்களை மட்டுமே அதிகம் எடுத்து வந்த மலையாள சினிமா உலகம், தற்போது கண்களுக்கு விருந்து படைக்கும் பிரம்மாண்ட பட உருவாக்கத்தை கையில் எடுத்துள்ளனர்.

நடிகர் ப்ருதிவிராஜ் நடிப்பில் ஆர்.எஸ். விமல் இயக்கத்தில் உருவாகிறது "கர்ணன்" மலையாள திரையுலகின் முதல் பிரம்மாண்ட படம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் துபாயில் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட்லுக் அனைவரையும் வெகுவாக கவர, பாகுபலிக்கு இணையாக பேசப்பட்டு வருகிறது. மோஷன் போஸ்டரின் பின்னணி இசையும், ப்ருத்வியின் குதிரை காட்சியும் கண்களை ஈர்க்கின்றன.

 மலையாளம் மற்றும் தமிழில் முறையே உருவாகும் இப்படத்திற்கு பாகுபலி புகழ் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 45 கோடி செலவில் எடுக்கப்படவுள்ள இப்படம் குறித்து இயக்குநர் விமல் கூறுகையில், இப்படம் மகாபாரதத்தில் வரும் கர்ணன் பற்றியக் கதை எனவும், பாகுபலியும், இப்படமும் வேறு வேறு கதாம்சங்களை கொண்டது, இருப்பினும் பாகுபலிக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக இருக்காது எனவும் இயக்குநர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.விமல், ப்ருதிவிராஜ் கூட்டணியில் சென்ற வருடம் வெளியான "என்னு நின்டே மொய்தீன்" படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.எனினும் தமிழில் செவாலே சிவாஜி நடிப்பில் ஏற்கனவே ஒரு கர்ணன் படம் மெகா ஹிட் லிஸ்டில் உள்ளது. சமீபத்தில் டிஜிட்டலிலும் வெளியாகி 100 நாட்களைத் தொட்ட தமிழ் கர்ணனின் சாதனைகளை முறியடிக்குமா, முதலில் மக்கள் ஏற்றுகொள்வார்களா? இந்தப் புது கர்ணனை. பார்க்கலாம்! 

0 comments:

Post a Comment