Monday 18 January 2016

தாரை தப்பட்டையும் தமிழ் ரசிகனும்! மீண்டும் வாருங்கள். ஆனால் எங்களோடு வாருங்கள்!

சில நடிகர்களின் படங்களுக்காக அவர்களது ரசிகர்கள் காத்துக்கிடப்பது போல சில இயக்குநர்களின் படங்களுக்காகவும் அவர்களின் ரசிகர்கள் காத்துக் கிடப்பதுண்டு. இந்த ரசிக எண்ணிக்கையில் அவ்வப்போது பொது ரசிகர்கள் இணைந்து கொள்வதும் நடக்கும். அப்படிப்பட்ட இயக்குநர்களின் ஒருவராக இருப்பவர் தான் பாலா.

தன் கதாபாத்திரங்களை, தன் கதைக் களங்களை அதுவரை எப்போதும் ரசிகன் பார்த்தறியாத, கேட்டறியாத விசயங்களாக படைப்பதில் பாலா, தன்னை மற்ற இயக்குநர்களிடம் இருந்து வேறுபடுத்திக்கொண்டார். அதனால், பாலாவின் படங்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது.

தாரை தப்பட்டையும் இந்த எதிர்பார்ப்பில் இருந்து தப்பவில்லை. அதற்கு பாலாவைத் தாண்டியும் சில காரணங்கள் வந்து சேர்ந்து கொண்டன. குருவின் படத்தின் சிஷ்யன் சசிக்குமார் நடிப்பதில் தொடங்கி, சிறந்த நடனக்கலைஞியான வரலட்சுமி சரத்குமார் கதாநாயகி என்பதாக நீண்டது அது. ஆனாலும் அதையெல்லாம் விட பெரிய காரணங்களாக அமைந்தது, நான் கடவுளுக்குப் பின் இளையராஜாவுடன் மீண்டும் பாலா என்பதும், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வியலை தாரை தப்பட்டையில் பதிவு செய்யப்போகிறார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையான யூகங்களும்.

திரைப்படங்களுக்கும் திரைப் படைப்புக்களுக்குமான வேறுபாடு என்பது நிரந்தரமானது. ஒரு திரைப்படைப்பு, திரைப்படமாக, பண்டமாக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பது அரிதாகவே நிகழும். ஆனால், அதற்கு நேரெதிராக திரைப்படங்கள், நுகர் பொருளாக, பண்டமாக ஏற்றுக்கொள்ளப்படுதல் மிக இயல்பாக சுலபமாக நிகழும். எனினும், திரைப்படங்கள் எப்போதும் திரைப்படைப்புகளுக்கு சரிநிகராகானவை அல்ல. திரைப்படங்கள் இயக்குநர்களாலும் திரைப்படைப்புகள் படைப்பாளிகளாலும் உருவாக்கப்படுகிறது.

அப்படியே, தாரை தப்பட்டையும் திரைப்படைப்பாக உருவாக்க முயற்சி செய்யப்பட்டு, படைப்பாகவும் இல்லாமல் பண்டமாகவும் இல்லாமல் இடையில் எங்கோ, ஆளில்லாத காட்டில் முழங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு படைப்பாளி எப்போதும் ரசிகனை திருப்திப்படுத்துவது பற்றி யோசிப்பதே இல்லை, அவன் திருப்திப்படுவதிலும் படைப்பை திருப்திப் படுத்துவதிலுமே முனைப்பாக இருக்கிறான்.

நமக்கு பிடித்த்தை உருவாக்க சொல்லியோ, நமக்கு பிடித்த மாதிரியே உருவாக்க சொல்லியோ நாம் படைப்பாளிகளிடம் அடம் பிடிக்க முடியாது. கட்டளையிடவும் முடியாது. அதிலும் இன்றைய தமிழ் சினிமாவில் ரைட்டர்கள் எனப்படுகிற, கதாசிரியர்கள் பஞ்சம் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக இருக்கிறது. அதையும் தாண்டி இருக்கின்ற சிலருக்கு வாய்ப்புகள் தரவில்லை என்றோ, புதிய கதாசிரியர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றோ எடுத்துக்க்கொள்ளலாம்.

உற்பத்தி செய்பவன் இயக்குநர் என்றால், அவனிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்பவர் தயாரிப்பாளர். தயாரிப்பாளர், இந்தப் பொருள் சந்தையில் விலை போகும் என்று நம்பியே வாங்குகிறார். கொடுக்கிறார். உற்பத்தி செய்வதும் கொள்முதல் செய்வதும் விற்பதும் அவர்கள் பாடு. அதைப்பற்றி ரசிகன் பெரிதாக யோசித்துக்கொண்டிருக்க முடியாது. சராசரி வணிகத்தின் எந்த இலக்கணங்களும் சினிமாவுக்கு செல்லுபடி ஆகவே ஆகாது, என்பதையே “சூது கவ்வும்”களும், “கும்கி”களும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”களும், “குசேலர்”களும் “லிங்கா”க்களும் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்கின்றன.

சரி, தாரை தப்பட்டைக்கு வருவோம்.

பாலாவின் மாயாஜாலங்களும் நகைச்சுவைத் தோரணங்களும் தாரை தப்பட்டையில் இல்லாமல் போனதே,அதன் ஆகப் பெரிய பலவீனம். பிதாமகன் போலவோ, நான் கடவுள் போலவே முன்பாதி நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட தாரை தப்பட்டையால் முடியவில்லை. இதில் நகைச்சுவை என்ற பெயரில் பாலா செய்திருப்பதெல்லாம் இரட்டை அர்த்த விசயங்களாகிப் போனதால், அதை நகைச்சுவையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போல மேளமும் நாதஸ்வரமும் கரகாட்டமும் திரையில் தாறுமாறாக எகிறப்போகிறது என்கிற கற்பனைக்குள் தமிழ் ரசிகனை தனக்குத் தெரியாமலே தள்ளி விட்டது தாரை தப்பட்டை.

கூடவே இளையராஜா என்பதும், இளையராஜாவின் 1000வது படம் என்பதும் ரசிகர்களை இன்னும் உசுப்பேத்தி உற்சாக துள்ளாட்டம் போட வைத்த்து. இது தான் கதை என்று நான் எதையும் சொல்லவில்லையே என்று பாலா தப்பித்துக் கொள்ள நினைத்தாலும் ரசிகர்கள் நினைத்தும் எதிர்பார்த்தும் முழுக்க முழுக்க ஒரு பாலா ஸ்டைல் தில்லானா மோகனாம்பாள் அல்லது கரகாட்டக்காரன் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆனால், மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களின் ஒரு சில துளி ரசனை கூட தாரை தப்பட்டையில் இல்லாமல் போனது மிகப்பெரிய துர் அதிர்ஷ்டமே ரசிகர்கள் எவ்வளவோ புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள். அதிலும் பாலாவின் திரைக்கதை ஸ்டைல் அவர்களுக்கு அத்துப்படி ஆகிவிட்டது.

பிதாமகன், நான் கடவுள், அவன் இவன்… ஸ்டைல் தான் இந்தப்படமும் என்பதை இடைவேளை வரும்போதே முடிவு செய்து விடுகிறான் ரசிகன். பிதாமகனில் விக்ரம் மகாதேவனைக் கொல்வது போல, நான் கடவுளில் ஆர்யா ராஜேந்திரனைக் கொல்வது போல, அவன் இவனில் விஷால் ஆர்.கே.யைக் கொல்வது போல, தாரை தப்பட்டையில் சசிக்குமார் ஆர்.கே.சுரேஷைக் கொல்லப்போகிறார் என்பதை அவன் முன்பே கண்டுபிடித்து விடுவதால்… எதுவும் புதிது இல்லை என்ற நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். அதாவது AS USUAL BALA FILM என்கிற நிலைக்கு.

ஆனால், பாலா தான் சொல்ல நினைத்த விசயத்தை சொல்லிவிட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டார். கரகாட்டக்கார்ர்களின் வாழ்க்கை இன்றைய நிலையில் அத்தனை சுகமாக இல்லை என்பதை சொல்லி விட்டு, அப்படியே வழக்கம்போல இன்னொரு இருட்டு உலகத்துக்குள் தாவுகிறார். அந்த இருட்டு உலக நிகழ்வுகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அப்படி நடக்கவில்லை என்றெல்லாம் நம்மால் சத்தியம் செய்ய முடியாது.

ஜி.எம்.குமார் நல்ல நடிகராகவே இருக்கலாம், ஆனால் அவரின் கதாபாத்திரம் மகா குழப்பக் குளறுபடியாக இருக்கிறது. சகலகலா வல்லவராக நாதஸ்வரத்தை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு சங்கீதக் கச்சேரி நிகழ்த்துகிற குடிகார கோமாளிக்கும் தாரை தப்பட்டைக்கும் என்ன சம்பந்தம் என்று ஒண்ணும் புரியவில்லை.

அது போலவே, சசிகுமாரும்… எதனால் அவ்வளவு தாடியோடும் தலைமுடியோடும் திரிகிறார் என்று கடைசி வரை விளங்கவே இல்லை. எம்.ஜி.ஆர், ராமராஜன், சரத்குமார் போட்ட மஞ்சள், சிவப்பு, பச்சை, ரோஸ் சட்டையெல்லாம் நேரில் பார்க்காத எங்க ஊர் சனமெல்லாம், அவங்கவங்க ஊர்த்திருவிழாவுக்கு வருகிற நாதஸ்வர வித்வான்களிடம் பார்த்திருப்பார்கள்.

பளீர் வெள்ளை வேட்டியும் பளபளா சட்டையுமாக கழுத்தில் நீளமான செயின், க்ளீன் ஷேவ், உதடுகளில் வெத்தலைச் சிவப்பு, தேவைப்பட்டால் லிப்ஸ்டிக் என நாங்கள் பார்த்த நாதஸ்வர வித்வான்கள் எல்லாம் வேற வேற மாதிரி. ஆனா, சசிகுமார் இழவு வீட்டுல ஆடுற மாதிரியான ஒரு தோற்றத்திலேயே தான் எப்போதும் இருக்கிறார்.அவரை நாதஸ்வர வித்வானாக ஏற்றுக்கொள்வதெல்லாம் எந்த்த் தலைமுறையாலும் முடியாது பாலாண்ணே.

படத்தின் இரண்டே இரண்டு நல்ல விசயங்கள்… ஒண்ணு வரலட்சுமி. இன்னொண்ணு இளையராசா.

“அக்காங் மாமா, அக்காங் மாமா… ம்க்கும் மாமா… ” என வரலட்சுமி வம்பளக்கும்போதும் “என் மாமனுக்காக அம்மணமாகக் கூட ஆடுவேன்” என காதலும் பாசமும் கலந்து திமிரும் போதும் சசிகுமாருக்கு பதிலாக அந்த இடத்தில் மாமனாக நம்மை உட்கார வைக்க ஆசைப்பப்டுகிறது மனசு. அச்சு அசலாக அட்ரா சக்கையாக, கரக்காட்டக் கட்டழகியாக, வரலட்சுமி… சிரம் தாழ்ந்த வணக்கம் லட்சுமி. அலப்பரையிலும் ஆட்டத்திலும் அதிரடியிலும் வரிந்து கட்டுகிறார் வரலட்சுமி.

ஆனால் அந்த வரலட்சுமிக்கு கூட அதிகம் இடம் தராமல் மோசடி செய்கிறார் பாலா…

படத்தில் கரகாட்டக்கார்ர்களின் ஒரிஜினல் ஆட்டம் மற்றும் ஸ்டெப்ஸ் எல்லாம் எங்காவது தான் தட்டுப்படுகிறது.எல்லா நடன அசைவுகளும் சினிமாத்தனமாக பார்த்துப் பழகியதாகவே இருக்கிறது. நிஜமான கரகாட்டக்கார்ர்களின் ஆட்டத்தை இளையராசா இசையோடு நாள் முழுக்க பார்ப்பதென்றாலும் ரசிகன் சளைக்க மாட்டான். ஆனால், கரகாட்ட உடையில் சினிமா ஆட்டங்கள் சலிப்போ சலிப்பு.

போதாக்குறைக்கு இதில் இளையராசாவையும் இழுத்து விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் பாலா. இளையராஜா எழுதி ஷரத் பாடி இருக்கும் “என் உள்ளம் கோவில்… “ பாடல் கேட்ட நிமிடத்தில் இருந்து இதயத்தில் ஒட்டிக்கொண்டு இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், படத்திலும் கதையிலும் அது ஒட்டவே இல்லையே என் ஆச ராசா. அதைப்போல்வே, “பாருருவாய பிறப்பற வேண்டும்” பாடலும்.

“மாங்குயிலே பூங்குயிலே”வையும் எதிர்பார்த்து வாருங்கள் என்பது போல உசுப்பேத்திவிட்டு, அதில் குயிலை அல்ல, காக்காவைக் கூட பார்க்க முடியாத ரசிகன், பாவம் என்ன செய்வான்? மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் கூட வரலட்சுமிக்கு இல்லாமல் போனதில்… பாலா மீது நிறைய கோபமும்…. ராசா மீது நிறைய வருத்தமும் இருக்கவே செய்கிறது.

தமிழர் திருநாளின் மெலிதான துக்கமாக, தாரை தப்பட்டையை நினைத்துக்கொண்டு அடுத்த வேலைக்கு தயாராகிறார்கள்… தீவிர ராசா ரசிகர்களும்… தீவிர பாலா ரசிகர்களும்… வேறென்ன செய்ய?

ரெண்டு ரெண்டே கால் மணி நேரத்திற்குள் படம் முடிந்தே ஆகவேண்டும் என்று எதுவும் இல்லையே அய்யா. 3மணி நேரம் ஓடக்கூடிய “பாகுபலி” எந்த மொழியில ஓடினாலும் எத்தனையாவது தடவை ஓடினாலும் இன்னும் பாக்கிறானே ரசிகன்?

இன்னும் கூடுதலாக அரை மணி நேரத்திற்கு கரகாட்டத்தையும் திருவிழாக்களையும் அங்கே நடக்கிற அழகான கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் காட்சிப்படுத்தி இருக்கலாமே…? திருவிழாக்கள் இன்னும் கூட இளமையாகவே இருக்கிறது நிறைய ஊர்களில்.

உங்கள் திரைக்கதையின் தேவையும் ஆசையும் திருவிழாக்கள் அல்ல என்பது புரிகிறது… ஆனால் எங்களின் தேவை ரசிகனின் தேவை அதுவாகத்தானே இருக்கிறது.

ஆகவே, எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் வாருங்கள். ஆனால் எங்களோடு வாருங்கள். எங்களுக்காக வாருங்கள். எதையும் எங்களில் ஒருவராக பாருங்கள்.

0 comments:

Post a Comment