Monday 18 January 2016

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் அவரோடு சேர்ந்து பணியாற்றிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும். எல்லாரும் சொல்கிற ஒரே குற்றச்சாட்டு, “அவரை வச்சு இனிமே எங்களால் படமே பண்ண முடியாதுங்க. ஏன்னா அவர் கேட்கிற சம்பளம் அப்படி” என்பதுதான்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ‘தங்கமகன்’ ரிலீஸ் நேரத்தில் பேசிய தனுஷ், “அவரு கேட்கிற சம்பளத்தை கொடுக்கிற அளவுக்கு எங்க கம்பெனி பெரிய கம்பெனி இல்ல” என்றார் சிரித்துக் கொண்டே! கடையாணியை புடுங்கி மருதாணி போட்ட மாதிரிதான் இந்த சிரிப்பும் விமர்சனமும்! இந்த விஷயத்தை அப்படியே பத்திரிகைகளில் ஊதிய நிருபர்கள், அதற்கப்புறம் சிவகார்த்திகேயனை பார்த்த போது, “மீண்டும் தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிப்பீர்களா?” என்று கேட்க, “கண்டிப்பா நடிப்பேன்” என்றார் அவரும்.

இதோ- அடுத்த ராக்கெட்… பற்ற வைத்தவர் பாண்டிராஜ். மெரீனா படத்தை தயாரித்தவர், சிவகார்த்திகேயனை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை இயக்கியவர் என்று பாண்டிராஜுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவே அழுத்தமான பந்த பாசம் உண்டு. இருந்தாலும் இன்று ‘கதக்களி’ படத்தின் வெற்றியை அறிவிக்கிற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்ன விஷயம், மறுபடியும் சிவாவின் சட்டையில் ஒரு பட்டனை புடுங்கிய கதைதான். உங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவே ஒப்பந்தம் உண்டு. அதன்படி நீங்கள் இயக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க வேண்டும். அந்த இன்னொரு படம் எப்போ? இதுதான் கேள்வி.

“அவரு என்னங்க? சம்பளம்னு பத்து விரலையும் நீட்டி அதுவும் பத்தாம அதுக்கும் மேல காட்றாரு. பார்க்கலாம்” என்றார் பாண்டிராஜ். தனது மார்க்கெட்டும், வியாபாரமும் உயர உயர ஒருவர் அதற்கேற்ப சம்பளம் கேட்பது தவறா? என்பதுதான் பலரது டவுட்!

அதிருக்கட்டும்… நியாயமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கதக்களி, நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். “குறைந்த செலவு. நிறைந்த லாபம். நானும் ஹேப்பி. விஷாலும் ஹேப்பி” என்றார் பாண்டிராஜ். போகிற போக்கை பார்த்தால், மீண்டும் ஜாயின்ட் போடுவார்கள் போலிருக்கிறது இருவரும்! அதிலேயும் வெளியூர்ல இருந்துதான் வருவாராங்க விஷால்?

பின் குறிப்பு- கதக்களி என்று பெயர் வைக்கப்பட்டதால் இந்த படத்திற்கு வரிவிலக்கு தரப்படவில்லை.

0 comments:

Post a Comment