Wednesday 20 January 2016

ஆஸ்கர் ரேஸ்: லியோவுக்கு சவால் தரும் 'தி டேனிஷ் கேர்ள்'!

 'தி கிங்ஸ் ஸ்பீச்' (The King's Speech), 'லெஸ் மிஸெரபில்ஸ்' (Les Misérables) உள்ளிட்ட படங்களை இயக்கிய டாம் ஹூப்பரின் சமீபத்திய படைப்பு 'தி டேனிஷ் கேர்ள்' (The Danish Girl).

வரலாற்றில் முதல்முறையாக பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐனர் வீக்னர் என்பவரது உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் 'தி டேனிஷ் கேர்ள்'. கெர்டா, ஐனர் இருவரும் கணவன் - மனைவி. தம்பதிகள் இருவருமே ஓவியர்கள். ஒருநாள் தனது மனதில் இருக்கும் பெண்ணின் ஓவியத்தை வரைய, தனது கணவனான ஐனருக்கே பெண் உடை அணிவித்து மாடலாக நிற்க வைக்கிறாள் கெர்டா

அந்தத் தருணத்தில் தன்னுள் இருக்கும் பெண்மையை உணரும் ஐனர், கொஞ்சம் கொஞ்சமாக தனது உண்மையான பாலியல் தன்மையை உணர்கிறான். தொடர்ந்து, ஐனரை பெண் மாடலாக வைத்து கெர்டா வரையும் ஓவியம் அவளுக்கு புகழைத் தேடித் தர, அந்த பெண் மாடல் உருவத்துக்கு லில்லி என பெயரும் வைக்கப்படுகிறது. தன்னை லில்லியாகவே நினைத்துக் கொள்ளும் ஐனரின் வாழ்க்கை, ஹான்ஸ் என்ற பால்ய நண்பணின் வருகையால் இன்னும் சிக்கலாகிறது.

இதனிடையே தனது கணவனின் மாறுதலை முதலில் வலியுடன் எதிர்கொள்ளும் கெர்டா, ஒரு கட்டத்தில் அவனுக்கு ஆதரவாக நிற்கிறாள். மனைவியின் துணையுடன், பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் முடிவை ஐனர் எடுக்கிறான். அந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வரும் சிக்கல்கள், ஐனர் ஹான்ஸ், கெர்டா இவர்களுக்கு நடுவில் இருக்கும் உறவு என்ன ஆனது என்பது தான் 'தி டேனிஷ் கேர்ள்' படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் ஐனர் வீக்னராக எட்டி ரெட்மெய்னும், கெர்டா வீக்னராக அலிசியா விகந்தரும் நடித்துள்ளனர். படத்துக்கு ஏற்கெனவே விமர்சன ரீதியாக பெரும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், திருநங்கையாக மாறும் ரெட்மெய்னின் நடிப்புக்கும் விமர்சகர்களின் பாராட்டு குவிந்துள்ளது. அலிசியா, தனது கெர்டா பாத்திரத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதுதினை க்ரிடிக்ஸ் சாய்ஸ் விழாவில் வென்றுள்ளார். ரெட்மெய்ன், ஏற்கெனவே 'தி தியரி ஆஃப் எவ்ரிதிங்' (The Theory of Everything) படத்துக்காக சிறந்த நடிகர் என ஆஸ்கர், பாஃடா, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை வென்றவர்.

சரி இதற்கும், லியார்னடோ டி காப்ரியோவுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்கள் என்றால், 'தி ரெவனன்ட்' (The Revenant) படத்தில் நடித்ததற்கு, சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை லியார்னடோ பெற்றுள்ளார். ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக லியோவுக்கு கிடைக்காத ஆஸ்கர் கண்டிப்பாக இம்முறை கிடைத்துவிடும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது, ஐனர் பாத்திரத்தில் நடித்த எட்டி ரெட்மெய்னும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பந்தயத்தில் இணைந்துள்ளார்.

ஆஸ்கர் நடுவர்கள் குழு லியோவுக்கு சாதகமாக இருக்காது. அது சார்புடையது. எனவே விருது வழங்காமல் இருக்க காரணம் தேடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு எட்டி ரெட்மெய்னின் நடிப்பு சிறந்த காரணமாக இருக்கும் என இப்போதே பல ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அதே நேரத்தில், தனது பாலியல் அடையாளத்தில் பிரச்சினை ஏற்பட்டு அதை எதிர்கொள்ளும் பாத்திரத்தில் எட்டியின் நடிப்பும் ஆஸ்கருக்கு உரிய நடிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

எனவே தற்போது சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் யாருக்கு என்பதில் லியோவும், எட்டியும் முன்னணியில் இருக்கின்றனர். ஆஸ்கர் விழா பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்குள் அருகிலிருக்கும் திரையரங்கில் தி டேனிஷ் கேர்ள் படத்தை பார்த்துவிட்டு, எட்டி ரெட்மெய்னின் நடிப்பு ஆஸ்கருக்கு உரியதா என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். 

0 comments:

Post a Comment