Wednesday 20 January 2016

விஷாலுக்குப் பின்னால் இருப்பது யார்? சந்தேகம் கிளப்பும் நடிகர்

"நடிகர் சங்கத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை. சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்கத் தயார்’’ என்று தெரிவித்துள்ள முன்னாள் பொருளாளர் நடிகர் வாகை சந்திரசேகர், இவர்களுக்குப் பின்னால் இருப்பது யார்? எதற்காகத் தூண்டி விடுகிறார்கள்? என்று புரியவில்லை என சந்தேகமும் கிளப்பியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள நாசர், விஷால், கார்த்தி ஆகியோர், "முந்தைய நிர்வாகத்தினர் 3 மாதங்களாகியும் வரவு-செலவுக் கணக்கு விவரங்களை ஒப்படைக்கவில்லை" என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில்,  2014-15 ஆண்டுக்கான நடிகர்சங்க வரவு- செலவுக் கணக்குகளையும்,  நடிகர் சங்க அறக்கட்டளையின் 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு சமர்ப்பிக்காததால் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர், " நடிகர் சங்கக் கணக்குகளில் தவறுகள் நடந்து இருப்பது போல் புதிய நிர்வாகிகள் குற்றம் சாட்டுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் நடிகர் சங்கப் பொருளாளர் பொறுப்பை ஏற்றேன். பதவியில் இருந்த காலத்தில் நேர்மையாக செயல்பட்டுள்ளேன். சங்க அலுவலகத்தில் எனது அறையில் இருந்த நாற்காலி, மேஜை, டி.வி போன்றவற்றைக் கூட என் வீட்டில் இருந்துதான் எடுத்து வந்து பயன்படுத்தினேன். சரத்குமாரும் அப்படித்தான் செய்தார். நடிகர் சங்க வளர்ச்சிக்காக சரத்குமார் கடுமையாக உழைத்தது எனக்கு தெரியும்.

அதன்பிறகு சரத்குமார் கலைநிகழ்ச்சி உள்பட பல்வேறு வழிகளில் அறக்கட்டளைக்கு வருவாய் ஈட்டினார். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து 3 தடவை தலா ரூ.25 லட்சம் வீதம் 75 லட்சம் ரூபாயை தனது சொந்த முயற்சியால் வாங்கிக் கொடுத்தார். நடிகர் சங்கத்தின் அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதை நடிகர் சங்கத்தின் பெயரிலேயே பதிவு செய்து கொடுத்தார்.

தேர்தலுக்கு முன்பு நடிகர் சங்க இடத்தை ரூ.60 கோடிக்கு விற்று விட்டனர் என்றும், ரூ.100 கோடிக்கு விற்று விட்டனர் என்றும் பழி சுமத்தினர். அது பொய் என்பதை தேர்தல் முடிந்ததும் தாய் பத்திரம் உள்பட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைத்து நிரூபித்தார். இதையெல்லாம் செய்த அவரைப் பாராட்டுவதை விட்டு பழி சுமத்துவது நியாயம் இல்லை.

நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளை கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதற்கு விளக்கங்கள் கேட்டார்கள். பதில் சொல்ல அவகாசம் அளிக்காமல் அவதூறு பரப்பி உள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட செலவுகள், ஊழியர்கள் சம்பளம் என நடிகர் சங்கத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் செலவாகிறது. போராட்டங்கள், விழாக்கள் போன்றவற்றுக்கும் செலவு செய்யப்பட்டு உள்ளது. இதையெல்லாம் சிந்திக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு குறை சொல்கிறார்கள்."என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment