Tuesday 26 January 2016

சொந்தப் படம் எடுக்கும் ஹீரோக்களின் கணக்கு

நம்பிக்கைக்குரிய நண்பர்கள் அல்லது மானேஜர்கள் பெயரில் ஹீரோக்களே படம் தயாரிப்பது புதிதல்ல. கடந்த காலங்களில் பல ஹீரோக்கள் இப்படி வேறு ஒருவர் பெயரில் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். இப்ராகிம் ராவுத்தர் பெயரில் விஜயகாந்தும், ராமனாதன் பெயரில் சத்யராஜும், சுந்தேரசன் பெயரில் சரத்குமாரும், கபார் பெயரில் கார்த்திக்கும், நிக் அர்ட்ஸ் சக்கரவர்த்தி பெயரில் அஜித்தும் படங்களை தயாரித்துள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளனர். விஜய்சேதுபதி புரடக்ஷன்ஸ் என்ற பெயரிலேயே ஒரு படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார் விஜய்சேதுபதி. அந்தப்படம் டேக்ஆப் ஆகவில்லை. எனவே தன்னுடைய நண்பர் கணேஷ் என்பவரை தயாரிப்பாளராக்கி ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தைத் தயாரித்தார்.

ஆரஞ்சு மிட்டாய் படம் படு தோல்வியடைந்தது. தற்போது கணேஷ் பெயரிலேயே றெக்க என்ற படத்தைத் தயாரிக்கிறார் விஜய்சேதுபதி. அவரது போட்டியாளரான சிவகார்த்திகேயன், தன்னுடைய நண்பரும் மானேஜருமான ஆர்.டி.ராஜா என்பவரை தயாரிப்பாளராக்கி தற்போது நர்ஸ் அக்கா படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தை மட்டுமல்ல அடுத்து நடிக்க உள்ள மோகன்ராஜா இயக்கும் படம், சிறுத்தை சிவா இயக்கும் படம் என அனைத்து படங்களையும் தன்னுடைய தயாரிப்பிலேயே எடுக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். தன்னுடைய படத்துக்கு பல கோடிக்கு பிசினஸ் இருப்பதாக நினைக்கும் ஹீரோக்கள் அந்த லாபம் மொத்தத்தையும் தானே அறுவடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனாலேயே சொந்தப்படம் எடுக்கிறார்கள். இவர்களின் கணக்கு எத்தனை காலத்துக்கு வொர்க்அவுட்டாகும்?

0 comments:

Post a Comment