Friday 29 January 2016

கதை சொல்லும் ஜெயலலிதாவின் கார்

 சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் சென்னை வீதிகளில் ஒரேயொரு ஃபோர்ட் கார் மட்டுமே ஓடியது. அந்தக் காருக்கு சொந்தக்காரர் அன்று முன்னணி திரைநட்சத்திரமாக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்தக் கார் அன்றைய ஜெயலலிதாவை - காரின் பாஷையில் பேபி - குறித்து பேசினால் எப்படியிருக்கும்? இப்படியொரு ஐடியா அந்தக் காலத்திலேயே எழுந்து தனி கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். மினுக்கி எழுதப்பட்ட ஜிகினா கட்டுரைதான் என்றாலும் படிப்பதற்கு தமாஷாகவே இருக்கும். இனி ஓவர் டு ஃபோர்ட் கார்.

முதன் முறையாக சென்னைக்கு வந்தபோது எனக்கு ஒரே பெருமை. நான் சுமந்து செல்ல வேண்டியது ஒரு பிரபல நடிகை. நடிகையின் கார் என்ற முறையில் எவ்வளவு பெரிய விழாக்களிலும் ஆடம்பர விருந்திலும் இந்த ஃபோர்ட் டுகூனு எம்.எஸ்.எம். 9379 க்கு தனி வரவேற்புண்டு. எந்த இடத்திலும் ஒயிலாக ஓசையெழுப்பாமல் நான் போனாலும் எல்லோரும் என்னையே கவனிப்பார்கள். ஆரம்பத்தில் எனக்கு தலைக்கனமாகவே இருந்தது. என் அழகையும் அலங்காரத்தையும் கண்டுதான் அத்தனை பேரும் இப்படி விழுந்தடித்துக் கொண்டு பார்க்கிறார்கள் என்று நினைக்க நினைக்க, எனக்கு தற்பெருமை பெருகியதிலும் வியப்பில்லைதான். போதாததற்கு என் குலத்தைச் சேர்ந்த பல கார்கள் இந்த அகன்ற நகரத்தில் இருந்தாலும் என் குடும்பத்தைச் சேர்ந்த கார் நான் ஒன்றுதான் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு டூப் இல்லை. பின்னர்தான் நான் சுமந்து செல்லும் நடிகைக்காகதான் அப்படி ஒரு பரபரப்பு என்பதையும் புரிந்து கொண்டேன்.

என்னால் அவருக்கு பெருமை என்பதைவிட அவரால் எனக்குப் பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். மாம்பலம் சிவஞானம் தெருவிலிருந்து கிளம்பி, உஸ்மான் ரோடு வழியாக, ஆற்காட் ரோட்டில் ஒரு நாளைக்கு நான்கு முறையாவது நான் செல்லும் போது, ஒவ்வொரு முறையும் அனைவரின் பார்வையும் என் மீது திரும்பும் பெருமையை நீங்கள் எனக்கு தந்தாலும் சாp, நான் சுமக்கும் நடிகைக்குத் தந்தாலும் சாp... எனக்குத் திருப்திதான்.





சென்னைக்கு வந்ததும் அழகு நகரத்தின் அத்தனை மூலை முடுக்குகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு. ஆனால் முடியவில்லை. இருப்பினும் பிரபலமான பல இடங்களை நான் சுற்றிப் பார்த்துவிட்டேன். என் வேகத்திற்கேற்ற அகன்ற சாலைகள், என் ஊரைப்போல் (நான் பிறந்தது அமெரிக்கா தெரியுமில்லே) இங்கு இல்லாதது எனக்கு ஒரு வருத்தம்.

நான் சுமக்கும் பிரபல நடிகை ஜெயலலிதாவை நான் பேபி என்று அழைக்கிறேன். எனக்கு அவர் பேபிதான். குழந்தை மனம் கொண்டவரானதால் மட்டும் அப்படி கூப்பிடவில்லை. ஒரு குழந்தையை தாய் சுமப்பது போல் நான் என் பேபியை சுமக்கிறேன். ஆடாமல் அசையாமல் கண்ணிமைப்போல் காக்கிறேன். அந்தக் கலைச்செல்வியை லட்சக்கணக்கானவர்களின் கனவுக் கன்னிகையை காக்கும் பொறுப்பையல்லவா நீங்கள் எனக்கு தந்திருக்கிறீர்கள். அப்பாடி.. எவ்வளவு பெரிய பொறுப்பு.

என் பேபிக்கு இசையென்றால் உயிர். அதற்காக ரேடியோ ஒன்று என்னிடத்தில் உண்டு. வெயில் காலங்களில் கண்ணாடியைத் திறந்து போட்டுச் செல்ல முடிவதில்லை. தூசி படியும் என்பது மட்டுமல்ல, என் பேபியின் மேக்கப்பும் கலையும். ஆனால் குளிர் காலங்களில் வெதுவெதுப்பாகவும் வெயில் காலங்களில் குளுகுளுப்பாகவும் இருக்க தனித்தனி வசதிகள் செய்து கொண்டிருக்கிறேன். நான் பகல் வேளைகளில் கண்ணை மூடிக் கொண்டேதான் செல்வேன். இரவு தேவைப்படும்போது மட்டும் கண் திறந்து கொள்வேன். என் கண்ணிலிருந்து வரும் ஒளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் தெரியுமா?

 பேபியை மந்து கொண்டு நான் முதன்முறையாக மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றேன். காசிதான் என்னை ஓட்டிச் சென்றார். கண்போல் என்னை காத்து வரும் அவர் மீது கோபம் கோபமாக வந்தது. பேபி விமானத்தில் ஏறி ஜப்பான் சென்றுவிட்டார். நான் தனியாக திரும்பி வரும்போது காசிக்கு மட்டும்தான் தெரியும் என் மனக்கஷ்டம். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் செல்லாமல் பேபி போய்விட்டாரே... இந்தக் காசியாவது ஏன் முன்னாலேயே சொல்லவில்லை? சொல்லியிருந்தால்...?
FILE

அந்த வருத்தத்தில் நான் பேபி போய் திரும்பி வரும்வரை ஷெட்டிலேயே கிடந்தேன். நான் பேபியைத் தவிர யாரையும் சுமக்கத் தயாராக இல்லையே. கொஞ்ச நாளிலேயே என் வருத்தம் குறைந்தது. ஆனால் அந்த விமானத்தின் மீதிருந்த கோபம் மட்டும் தணியவே இல்லை. அதற்கொரு சந்தர்ப்பமும் கிடைத்தது - பழி தீர்த்துக் கொள்ள.

சுமதி என் சுந்தரி படப்பிடிப்பில் கலந்து கொள்ள பேபி தேக்கடிக்குப் போகும் போது என்னையும் அழைத்துச் சென்றார். அதுதான் என் லாங்கஸ்ட் ட்ரிப். இங்கே சென்னையில் ஜனாதிபதியின் பரிசளிப்பு விழா மறுநாள் நடக்க இருந்தது. எனக்கு அந்த விழாவில் அப்படி ஜிம் என்று போய் நிற்க வேண்டுமென்று ஆசை. பேபிக்கும் பரிசு வாங்க துடிப்பு.

மாலையில் அங்கிருந்து கிளம்பி காலையில் சென்னைக்கு வந்துவிட்டேன். ஜனாதிபதி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இரவு கிளம்பி, தேக்கடிக்கு மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்தேன். விழாவில் கலந்து கொண்ட திருப்தி மட்டுமல்ல எனக்கு. அந்த விமானத்தின் மீதிருந்த கோபத்தையும் தீர்த்துவிட்ட திருப்தி. மணிக்கு நூறு மைல்களுக்கு மேலேயே போய் பேபியின் சபாஷ் பெற்றதோடு விமானத்தை நம்பியிருந்தால் நான் போய் இதற்குள் வந்திருக்க முடியாது என்ற பாராட்டும் வேறு கிடைத்தது. போதாதா எனக்கு, தலைகால் புரியவில்லை.

பெரிய ஸ்டாரின் கார் ஆயிற்றே நீ... ஒரு படத்திலேயாவது நடிச்சிருக்கியா, அட்லீஸ்ட் இன் ஏ பிளாக் அண்ட் ஒயிட் பிக்சர்? என்று என் பிரண்ட் பிளிமத் எப்போதும் கேட்பான். உங்களுக்குதான் பேபியிடம் ரொம்ப இது இருக்கே... நீங்களாவது எனக்கு சிபாரிசு செய்யக் கூடாதா? ப்ளீஸ்.

1972 ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையிலிருந்து அன்று வெளிநாட்டு கார்களின் மீதிருந்த பிரேமையையும், ஜெயலலிதா மீதிருந்த ரசிக பற்றையும் புரிந்து கொள்ளலாம். நமது பாலாபிஷேக ரசிகர்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாதவர்கள்தான் அப்போதும் இருந்திருக்கிறார்கள் என்ற திருப்தியை இந்த கட்டுரை தருகிறது. 

0 comments:

Post a Comment