Friday 29 January 2016

கல்பனாவின் அசாத்திய ஆற்றலில் கண் கலங்கியதுண்டு: கமல்

 கல்பனாவின் அசாத்தியமான நடிப்பைப் பார்த்து நான் கண் கலங்கியதும் உண்டு என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்த கல்பனா ஜனவரி 25-ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். பாக்யராஜ் நடித்த 'சின்ன வீடு' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து 'சதிலீலாவதி' படத்தில் நடித்தார். 'சதிலீலாவதி' படத்தைத் தொடர்ந்து கமலுடன் 'பம்மல் கே.சம்பந்தம்' படத்திலும் நடித்தார்.

கல்பனாவின் திடீர் மறைவு குறித்து கமல்ஹாசன், "திறமையான மூன்று சகோதரிகளில் ஒருவர் கல்பனா. ஊர்வசி, கல்பனா இருவரும் நான் தயாரித்த படங்களில் நடித்துள்ளனர். ஒரு படத்தின் இரு மொழி பதிப்புகளிலும், ஒரே பாத்திரத்தில் அவர்கள் நடித்ததைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சியே. கல்பனாவின் அசாத்தியமான நடிப்பைப் பார்த்து நான் கண் கலங்கியதும் உண்டு. அவர் இனி நடிக்கமாட்டார் என்பது எனக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் விஞ்ஞானத்துக்கு நன்றி, நடிகையாக அவர் திரையில் ஜொலித்த காலத்தை நம்மால் திரும்பிப் பார்க்க முடியும்.

கல்பனாவின் நகைச்சுவை உணர்வும், எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள். இத்தனை திறமையுடனும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும், அறிவும் தேவை. கல்பனாவுக்கு இரண்டும் இருந்தன. அவரது இழப்பை எண்ணி வருந்துகிறேன். மலையாள, தமிழ் திரையுலங்களுக்கும் அந்த வருத்தம் இருக்கவே செய்யும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

0 comments:

Post a Comment