Friday 29 January 2016

உலகை அச்சுறுத்தும் வைரஸ் 'சிகா' டெங்குவுக்கு அண்ணன்...!

உலகையே தன் காலடியில் கட்டி வைக்க ஆசைப்பட்ட மாவீரன் அலெக்சாண்டரை மன்னர்கள் சாய்க்கவில்லை. கொசுவால் உருவான மலேரியாதான் சாய்த்தது. 'சாதாரண கொசுடா நீ...!'  என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் தொனியில் சீண்டுவது,  கொசுவின்  'பவர்' குறித்த முழுமையான மதிப்பீடு தெரியாததால்தான்.

இன்று மலேரியா பரப்பும் கொசுக்களைத் தாண்டி, சிக்குன்குனியா கொசு, டெங்கு பரப்பும் கொசு என்று பல வகைகளில்  கொசுக்களின் வருகை அதிகரித்து விட்டது. கொசுக்களை விரட்டுவதாக கூறி மாநகராட்சிகளால் மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்னர், முன்பை விட வீரியமாக கொசு கோபம் கொண்டு சீறுகிறது என்று வேதனையுடன் குறிப்பிடுகிற நிலைதான் நடைமுறையில்  இருக்கிறது.

உலகளவில் ஆண்டுக்கு ஐந்து கோடி பேரை சாதாரணமாக முடக்கிப் போட்டு விடுகிறது ''டெங்கு'' . இன்றுவரையில் இதற்கான  ஆங்கில மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கொசு குடும்பத்தின் மூலம் பரவிவரும்  லேட்டஸ்ட் வரவுதான் புதிய வைரஸான  ''சிகா''. இதுவரையில் உலகளவில் சிகாவின் பாதிப்புக்கு ஆளானவர்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை என்பதே சிகா வின் வீரியம் எத்தகையது என்பதை உணர்த்திவிடும். உதாரணமாக கர்ப்பிணிப் பெண்ணொருவரை இந்த சிகா வைரஸ் பாதித்து விட்டால், பிறக்கும் குழந்தையின் தலை,  சராசரி குழந்தையின் தலையைவிட ஒரு மடங்கு பெரிதாக இருக்கும். இது சிகா வைரஸ் பரப்பும் கொசுவின் வீரியத்துக்கு சின்னதாய் ஒரு இன்ட்ரோ மட்டுமே.

டெங்கு காய்ச்சல் வந்தால் மனித உடல் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ளுமோ, அவை அத்தனையையும் விட  சிகா மூலமாக கொஞ்சம் கூடுதலாக கிருமிகள்,  உள்ளிருந்து வேலையைக் கொடுக்கும் வல்லமை கொண்டவை. டெங்கு கொடுக்கும் மஞ்சள் காய்ச்சல், கைகால் குடைச்சல், தலைபாரம், நாக்கு உலர்ந்து போதல், மரத்துப் போகும் நிலை. இதை  மனித உடலால் எதிர்க்கும் சக்தி இல்லை. சிகாவோ, இதையும் தாண்டிய கடுமையான வேதனையை கொடுக்கும்.

அதே சமயம் நோயின் தாக்கம் உடலில் எண்பது சதவீதம் ஊறிய பின்னரே,  அது சிகாவின் வேலைதான் என வெளியில் தெரியவரும். அந்த வகையில் ஜிகா,  ஒரு 'சைலண்ட் கில்லர்' என்று எச்சரிக்கிறது  உலக சுகாதார நிறுவனம்.

 "ஏடிஸ் மற்றும் எஜிப்தி வகையிலான கொசுக்கள் காடுகளில் மட்டுமே இருப்பவை. அவைகள் இப்போது நாடுகளில் மெல்ல பரவி வருகிறது. அமெரிக்க வர்ஜின் தீவுகள், வெனிசுலா மற்றும் கரீபியன்  தீவுகளில் இதன் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது " என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சிகாவை ஒழிக்க முடியாதா, என்ற கேள்விக்குள் போவதற்கு முன் சிகாவின் நதி மூலத்தை கொஞ்சம் உள் வாங்கிக் கொண்டால் வருமுன் காத்துக் கொள்ளலாம்.

 வட அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளையும், மத்திய அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளையும், தென் அமெரிக்காவின் வடக்கு-மேற்குப் பகுதிகளையும் தொட்டபடி செல்லும் மேற்கிந்திய தீவுகளின் ஒரு பகுதியில் இருப்பது கரீபியன் கடல் தீவு.  2500 மைல்கள் நீளம் கொண்ட ஒரு தீவுத்தொடர்தான் கரீபியன். காடு என்றும் சொல்ல முடியாத,  தீவு என்றும் சொல்ல முடியாத அந்த இருள் சூழ் ஏரியாதான் சிகா கொசுக்களின் தாயகம்.

தென்பசிபிக் கடற்பகுதியை மையமாகக் கொண்ட ஃப்ரெஞ்ச் பாலினேசியாவில்,  ஒரு விஞ்ஞானிக்குதான் சிகா,  தன்னுடைய கொடூர கிருமியை செலுத்தியது முதன்முதலில் தெரியவந்தது. ஆனால். அவரை விட அதிகம் பாதிக்கப்பட்டது ஒரு பெண். அதற்குக் காரணம், அவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உடலில் குறைவாய் இருந்த காரணத்தாலும், அவருடைய மனைவியாய் இருந்ததாலும் மட்டுமே. ஆக, 'உறவு' கள் மூலமே அதிக அளவில்  'சிகா'கிருமி பரவும் அபாயம் இருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

சிகாவின் வீரியத்தை உணர்ந்துதான் உலக சுகாதார நிறுவனம் வருகிற 1.2.2016 அன்று,  சிகா கிருமியின் வீரியத்தைத் தடுக்கும் பொருட்டு உலகளாவிய ஒரு விவாத மேடையை உருவாக்கி,  இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்தியாவும் அதில் பங்கேற்கிறது.

லஞ்சம், பாலியல் துன்புறுத்தல், சிறார் மீதான வன்மம், திருட்டு, கொலை, கொள்ளை, கள்ளச்சந்தை போன்றவைகளோடு சேர்த்து ஒழிக்கப்படவேண்டிய பிரதான பட்டியலில் கொசுவுக்கும் ஒரு இடத்தை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

0 comments:

Post a Comment